|
Abedeen's
Home
வண்ணக்களஞ்சியப் புலவர்
இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்களில் வண்ணம் பாடுவதில் வல்லவராகத் திகழ்ந்த முஸ்லிம்
தமிழ்ப் புலவர். இவரது இயற்பெயர் ஹமீத் இப்ராஹீம் என்பதாகும்.
வண்ணப்பாக்கள் புனைவதில் தனித்திறம் பெற்ற புலவராக விளங்கியதால் இவருக்கு
‘வண்ணக்களஞ்சியப்புலவர்’ எனும் பட்டம் வழங்கப்பட்டது. இப்பட்டம் நாகூர் தர்காவில்
நடந்த புலவர்கள் கூட்டத்தில் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.
இப்பெரும் புலவர் இராமனாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூருக்கு அருகில் உள்ள மீசல்
எனும் ஊரில் பிறந்தவர். இவர் சுலைமான் (அலை) அவர்களின் வாழ்வை விரித்துரைக்கும்
காவியமாக ‘இராஜநாயகம்’ நூலை இயற்றினார். இக்காவியம் இவரது தமிழ்ப்புலமைக்கும்,
மார்க்க ஞானத்திற்கும் அரிய சான்றாக விளங்குகிறது. இந்நூல் 2,240
விருத்தப்பாக்களால் ஆனது. இந்நூலுடன் ‘தீன் விளக்கம்’ எனும் பெயரில் சையிது
இப்ராஹீம் ஷஹீத் (ரஹ்) அவர்களின் வாழ்வையும் வாக்கையும் விளக்கிக் கூறும் காப்பியம்
ஒன்றையும் படைத்துள்ளார். இவர் படைத்த மற்றொரு நூல் ‘குத்பு நாயகம்’ என்பதாகும்.
இவர் நாடகத்தமிழ் வளர்ச்சிக்கும் துணை செய்துள்ளார். ‘அலி பாதுஷா’ நாடகம் என்பது
அப்படைப்பு. இவர் தம் வாழ்வின் பெரும்பகுதியை நாகூரிலேயே கழித்தார். இவரது
புலமையைப் பாராட்டி தஞ்சாவூர் மன்னர் இவருக்குச் சிங்கமுகச் சிவிகையொன்றை பரிசு
அளித்திருந்தார். இவர் தம் 81-ஆம் வயதில் இராஜ சிங்கமங்கலத்திற்கருகில்
தும்படைக்காக் கோட்டையில் காலமானார்.
- மணவை முஸ்தபா எழுதிய “இளைஞர்
இஸ்லாமியக் கலை களஞ்சியம்” (மீரா பப்ளிகேஷன்ஸ்) என்ற நூலிலிருந்து..
**
(இசைமுரசு நாகூர் ஹனீபா புகழ்பெற்ற
பாடகராக திகழ காரணமாயிருந்தது வண்ணக்களஞ்சிய அவர்கள் இயற்றிய பாடல். தன் பள்ளிப்
பருவத்தில் செட்டியார் ஸ்கூலில் முதற்முதலாக இறைவணக்கப் பாடலாக பாடி பாடகராக
உருவெடுக்க காரணமாயிருந்தது இப்புலவரின் பாடலே)
**
தகவல் உதவி :
அப்துல் கையும்
தொடர்புடைய சுட்டி :
சித்தி ஜூனைதா பேகம்
Send your Comments to abedheen@yahoo.com
|