சலாமலய்க்கும்...!
 

ஆபிதீன் பக்கங்கள்

Buy Abedeen's Book from 'Sneha Publishers'
நாகூர் புலவர்கள்

குலாம் காதர் நாவலர்

புலவர் ஆபிதீன்

சித்தி ஜூனைதா பேகம்

வஹாப் சாஹிப்

ஜஸ்டிஸ் இஸ்மாயில்

ரவீந்தர்

நாகூர் சலீம்

ஜாஃபர் முஹ்யிதீன்

தூயவன்

இஜட். ஜஃபருல்லா

கதீப் சாஹிப்

சாரு நிவேதிதா

நாகூர் ரூமி

ஆபிதீன்

 

  பதிவுகள்

  கீற்று

  திண்ணை

  தமிழ்மணம்

  தமிழரங்கம்

  மதுரை மின்தொகுப்பு

  நூலகம்

Abedeen's Home

களந்தை பீர்முஹம்மது

'களந்தை பீர்முஹம்மது தமிழில் இன்று எழுதக்கூடிய முஸ்லிம் எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர். சென்னையில் வொய்ட்ஸ் ரோட்டில் உள்ள ப்ரொபஷனல் கூரியர்ஸில் வேலை பார்க்கிறார். இதுவரை மூன்று சிறுகதைத் தொகுதிகள் வந்துள்ளன. 1. களந்தை பீர்முகம்மது சிறுகதைகள் 2. சிலுக்கு ஸ்மிதாவும் சுலைமான் ஹாஜியாரும் 3. சுழல்

சிந்தனைச் சரம் எனும் இஸ்லாமிய பத்திரிகையில் கடைசிப்பக்கம் சோதனைச்சாலை என்ற பெயரில் எழுதுகிறார். அவருடைய கதைகள் யதார்த்த எழுத்தின் அழகு கொண்டவை. உன்னிப்பான உளவியல் பார்வை கொண்டவை.
ஆனால் அவர்தான் இன்னும் கவனம் பெறமுடியாமல் இருக்கிறார். ' -

நாகூர் ரூமி


'பாதுகாக்கப்பட்ட துயரம்' - களந்தை பீர் முஹம்மது

 

இன்று மிகவும் பதற்ற நிலைக்குள்ளாகி இருப்பவர்கள் இஸ்லாமிய இளைஞர்கள். அவர்களின் மனவுலகம் அடர்ந்த இருட்டறையில் வாழ்கிறது. ஒளியில்லை. வழி தெரியவில்லை. எல்லாம் இருக்கிறது. ஆனால் எதுவுமே இல்லாத உணர்வு, நிர்க்கதி, கரை சேருவோமா மாட்டோமா என்கிற பீதி.

நிறைய படிக்கவும் வேண்டும் நிறைய சம்பாதிக்கவும் வேண்டும். ஆனால், இரண்டு நிலைகளும் ஒருங்கிணைவு அற்றுப்போய் உள்ளன. படிப்புக்கு சம்பந்தமேயில்லாத பண உளைச்சல், படித்தும் செலவினங்களுக்கு ஒப்பேறாத வேலையினால் மன உளைச்சல்.

ஓர் இஸ்லாமிய இளைஞனுக்கு தான் வாழும் நாடு மட்டுமே தனக்குரியது என்ற எண்ணமில்லை. முஸ்லிம்நாடுகள் அனைத்துமே தன் வளமார்ந்த வாழ்க்கைக்கான வசந்த வாசல்களே என்ற எண்ணமிருக்கிறது. இன்னும் முஸ்லிம்கள் எங்கெல்லாம் பெருவாரியாக வாழ்கிறார்களோ அங்கெல்லாம் கூட தனக்குச் சொந்தமெனும் உரிமை உணர்வுகளையும் கொண்டுள்ளான். எனவே எங்கு சென்றும் தனது இகலோக வாழ்வை இனிமையாக்கிவிட முடியும் என்று கருதுகிறான். ஆனால், அவன் சந்திக்கும் உலகமோ மிகப் பயங்கரமானதாக இருக்கிறது. தாறுமாறாக பிளவுண்டு கிடக்கிறது.

ஒவ்வொரு இளைஞனுக்கும் குர்ஆனின்மீது மிகுந்த நம்பிக்கையும் மரியாதையும் உள்ளது. பல ஹதீஸ்கள் அவனது மனத்தில் உறைந்து கிடக்கின்றன. அண்ணலாரைத் தனது உயிர் மூச்சாகக் கருதுகிறான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போல் தானும் இறுதிவரை இறைவிசுவாசத்தோடு வாழ உறுதி பூணுகிறான். தனது வாழ்வு நிறைவாக இருக்கும்போது தன்னால் தான் கற்ற மார்க்க வழிமுறைகளை நிறைவேற்றிக்கொள்ளமுடியும் என்ற ஆழமான பிடிப்புணர்வும் அவனுக்கு இருக்கிறது.

ஆனால் நடைமுறை வாழ்க்கை விதிவிலக்காகிவிடுகிறது. மற்ற சமுதாயத்தினரைப்போலவே ஒரு முஸ்லிம் இளைஞன் தனது வாழ்வனுபவங்களில் இருந்தும் தொலைக்காட்சி சேனல்களில் இருந்தும் புதிய வாழ்க்கை முறைமையைப் பெறுகிறான். வாயிலே குர்ஆனும் மனதிலே பாசாங்குமாக உருமாறுகிறான். அவனுக்கும் அவனது வாழ்க்கைக்குமான இஸ்லாமிய இணைப்புப் பாலம் எதுவும் இருப்பதில்லை. அவனது வாழ்க்கை நவீனப் பாசாங்குகளுக்கு முழுவதுமாய்ப் பணிந்து கிடக்கிறது.

மற்றொரு முகம் இருக்கிறது. தனது வாழ்க்கைத் தேடுதலை முஸ்லிம் நாடுகளில் துவக்குகிறான். அதற்கான முயற்சிகளில் அவனது கனவுலகமே சிதைந்து விடுகிறது. எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதில்லை. அவனது வேகத்தை நிறைவு செய்யும் பணிகளுக்கு வாய்ப்புகள் இல்லை. அவனது படிப்புக்கும் அறிவுக்கும் திறமைக்கும் பொருத்தமில்லாத அரசியல் சமூக அமைப்பில் அவன் ஒரு பிணையாளாகப் பிணைக்கப்படுகிறான். தனது வாழ்வின் ஊற்றுக் கண்களால் அவன் கருதி வந்த முஸ்லிம் நாடுகளோ, உலக வல்லரசுகளின் தேவையைப் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நிறைவு செய்யக்கூடிய நிர்ப்பந்த பிணையாளர்களாகக் கையொடிந்து நிற்கிற அவல நிலையைப் பார்க்கிறான்.

இதுநாள்வரை உரிமை கருதி வந்த வளங்களில் அவனுக்கு ஆளுமை இல்லை. அந்த நாடுகளின் உற்பத்திப் பொருட்களுக்கு அவற்றினாலேயே விலை நிர்ணயம் செய்ய முடியவில்லை. விஞ்ஞான வளர்ச்சியோடு எவ்விதத் தொடர்பும் இல்லை. தனது நாட்டின் பிரஜைகளைப் பொறுப்புள்ள குடிமக்களாக மாற்றி, கல்வித்துறையில் முன்னணி ஸ்தானத்திற்குள் கொண்டுவந்து நிறுத்த முடியவில்லை. சகலமும் போட்டிமயம் என்றாகிவிட்ட பொருளாதார மயமாக்கலில் கணிசமான அளவிலேனும் த்ன்னைப் பலவானாக நிலைநிறுத்த முடியவில்லை.

ஒரு சொட்டுநீரை எப்படிப் பயன்படுத்துவது? ஒரு சதுர அடி வறண்ட பூமியைக்கூட விணாக்கிவிடாமல் எப்படிப் பூத்துக்குலுங்கும் சோலையாக மாற்றுவது என்பதுபோன்ற வாழ்வாதாரமான விஷயங்களைக் கற்றுக்கொள்ள இன்று உலக நாடுகள் எவ்விதக் கௌரவமும் பாராட்டமல் இஸ்ரேலை நோக்கி விரைகின்றன. டெலஅவிவ் விமான நிலையத்தில் ஏதேனும் ஒரு தேசத்தின் அதிபர், அல்லது பிரதமர், ராணுவ அதிகாரி அல்லது விஞ்ஞானிகள் அடங்கிய குழு, அல்லது அதிகாரிகள் தலைமையிலான குழு என தினந்தோறும் வந்து இறங்கிக்கொண்டே இருக்கிறார்கள். அரசியல் நடைமுறைகளில், ஆட்சி நிர்வாகத்தில் சிறிதும் நாகரீகமற்ற இஸ்ரேல் தனது அறிவை-திறமையை-தொழில் நுட்பத்தை உலகமே வியக்கும்படி வலுப்படுத்தியுள்ளது. ஆனால், தினமும் குவியும் பெட்ரோல் டாலர்களை அள்ளிக்கட்டி வங்கிகளில் திணிக்கின்ற ஏனைய முஸ்லிம் நாடுகள் ஒரு விஷயத்திலும் கூட வழிகாட்டும் தன்மையைப் பெற்றிருக்கவில்லை. ஒரு முன்மாதிரியை, சிறிய தொழில் நுட்ப அறிவை முஸ்லிம் உலகத்தினால் இன்று வாங்க முடியவில்லை.

தனது இறையாண்மையைப் பாதுகாத்து, பிற முஸ்லிம் நாடுகளையும் உயிர்த்துடிப்பான அந்தஸ்துக்குக் கொண்டுவர முடியவில்லை. தனது மண்ணைப் பாதுகாக்க புதிய படைக்கலங்களை வாங்கிக் குவித்தாலும் அதனை இயக்குவதற்கும் அயல்நாட்டுக்காரனே வந்து முகாமிட வேண்டியுள்ளது. இப்படி எண்ணற்றக் குறைபாடுகளோடு நிற்கின்ற இஸ்லாமிய உலகம் ஓர் இளைஞனை வாழ்வின் விரக்திக்கு விரட்டியடிக்கிறது. இவற்றுக்கெல்லாம் என்னதான் காரணங்களாக இருக்க முடியும்?

குர்ஆனில் கூறப்பட்ட இரண்டு வழிகளை இஸ்லாமிய உலகம் இன்னும் ஏற்றுக்கொள்ளாமலும், ஏற்றுக்கொண்டதில் முதிர்ச்சி இல்லாமலும் இருப்பதுதான் காரணங்களாக இருக்க வேண்டும். 1. ஜனநாயகத்தையே மறுதலிக்கின்ற ஆட்சிமுறை. 2. கல்வியறிவின்மை. ஜனநாயகம் மறுதலிக்கப் படுவதால் அரசை வழிநடத்திச்செல்லும் ஒளிவிளக்கு இல்லை. இதனால் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வாகனம் தறிகெட்டுச் செல்வதைப்போல முஸ்லிம் நாடுகள் வீழ்ச்சி பெற்றுள்ளன. இதன்மூலம் அரசுசெய்யும் எந்தக் காரியங்களும், திட்டங்களும் இஸ்லாமிய வர்ணத்தைப் பூசிக் கொள்கின்றன. ஆனால் அவை உள்ளார்ந்த ரீதியில் இஸ்லாமிய நெறிமுறைகளுக்கே நேர்மாறானாதாகக் கூட இருக்க முடியும். இந்நிலை நீடிப்பதால் உலக நாடுகளின் முன்னேற்றப் பாய்ச்சலை அந்நாடுகளால் சுவீகரித்துக்கொள்ள முடியாமல் தத்தளிக்கின்றன.

இரண்டாவது காரணம் கல்வியறிவின்மை. உலகிலேயே படிப்பறிவற்ற ஆண்களும் பெண்களும் எந்த மதத்தில் அதிக விகிதத்தில் இருக்கின்றார்கள் என்பதை நோக்கினால் அது இஸ்லாம் மதமே என்று உறுதியாகக் கூற முடியும் என்ற அளவில் உள்ளது. அதிலுள்ள மகாக்கொடுமை என்னவென்றால், தத்தமது வீட்டுப்பெண்களை படிப்பறிவில்லாமல் அடுப்பங்கரைகளில் உழலும் பேசும் பொம்மைகளாய் ஆக்கிவைப்பதுதான் தாங்கள் அறிந்த இஸ்லாம் மார்க்கம் என்ற எண்ணத்தில் இருப்பதே!

அவ்வாறு மடைமயுற்று இருப்பது தங்களின் மார்க்க நேசிப்புக்குரிய சரியான அடையாளம் என ஒரு சாதாரண முஸ்லிம் பிரஜை கூட பீற்றிக்கொள்கிறான். கல்விக்கும் கல்வியைப் பெறுவதற்கும் அதிக முன்னுரிமை அளித்த மார்க்கமே இஸ்லாம்தான். ஆனால் அதன் ஆன்மீக நோக்கிற்கு மாறான ஒரு கருத்து எவ்விதம் உலகம் முழுவதிலும் பரவி செயல் பூர்வமாக கடைபிடிக்கப்படுகிறது என்பதே புரியவில்லை. இன்னும் பலர் ஓர் எல்லைக்கோடு வரைந்துள்ளனர். அந்த எல்லைக்கோட்டில் நிர்ணயம், ஒரு பெண் தனது கணவனின் கடிதத்தை வாசித்துப் புரிந்து கொள்வது, புரிந்து கொண்டதையும் கணவனுக்குப் பதிலாக எழுதி முடிப்பது என்கிற அளவுக்குள்ள கல்வி எவ்வளவோ அந்தக் கல்வியோடு முற்றுப்புள்ளி இட்டுக்கொள்வது.

இதனால் இஸ்லாமும் அதன் கொள்கைசார்ந்த வழிமுறைகளும் கடுமையான சேதாரத்தை அடைந்துள்ளன. நவீன உலகத்தின் அனைத்துத்துறை செயல்பாடுகளிலும் போட்டியிட முடியாமல் தானாகவே ஒதுங்கிவிடுகிறார்கள் - பெருவெள்ளத்தில் நுரைபோல. இந்த நுரைகளுக்கு அடர்த்தியும் இல்லை. செறிவும் இல்லை. ஆனால் இதைத்தான் நமது பெருமையின் சின்னமென உயர்த்திக்காட்டுகிறோம்.

இத்தகைய அவலமான சூழ்நிலையில் இஸ்லாமிய இளைஞர்கள் தத்தளிப்பது இயல்பானதுதான். இதனுடைய பாரதூரமான விளைவுகளைத்தான் நாம் இஸ்லாமியத் தீவிரவாதம் என்கிற கருத்தாக்கத்தில் சந்திக்கிறோம். விரக்தியும், வெறுப்பும், கோபமும், வேலையின்மை என்கிற பலவித இழைகள் தத்தமது தனி வண்ணங்களை இழந்து ஒரே நிறத்தில் -மதவெறித் தறியில் - நெய்யப்பட்டுள்ளன.

முஸ்லிம் நாடுகள் எதிர்கொண்டுள்ள நேரடித்தாக்குதல்களும் அதன் உட்சத்துகளை உறிஞ்சியெடுத்து வெறும் சேவகர்களாக மாற்றுவதும் இஸ்லாமியத் தீவிரவாதம் தலையெடுக்கும் வேர்களாக உள்ளன. சமூக நெருக்கடிகள் உருவாகும்போது ஒவ்வொரு சமுதாயமும் வரலாறு நெடுகிலும் பலவிதமான மாற்றங்களைச் சந்தித்தே வந்துள்ளன. அந்த வகையான நெருக்கடிதான் இஸ்லாமியச் சமூகத்திலும் நிகழ்ந்துள்ளது. இது ஒரு கோபத்தின் வெளிப்பாடே. ஆனால் இஸ்லாமியத் தீவிரவாதம் என்று குறிப்பிடுவதுதான் நம்மை மருள வைக்கிறது. இது எவ்வகையில் நியாயம்? இவ்வாறு அடிக்கப்படுவது சரிதானா?

சோவியத்தின் தலைமையிலான சோசலிச முலாம் வீழ்த்தப்பட்டபின் ஏகாதிபத்திய சக்திகளின் வேட்டைக்களமாக முஸ்லிம் நாடுகளே தென்படுகின்றன. மாற்று எரிபொருள் வசதி உருவாகும்வரை முஸ்லிம் பிரதேசங்களே ஏகாதிபத்தியங்களின் எரிபொருள் தேவையை வழங்குவன. எனவே ஒருவிதமான கருத்தியல் யுத்தமாக இஸ்லாமிய எழுச்சியை இஸ்லாமியத் தீவிரவாதம் என் முத்திரை குத்துகின்றன மேற்குலக நாடுகள். இதனால் முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் நாடுகளுக்கும் பிளவை உண்டாக்குகின்றன. அந்தப் பிரசாரத்திற்குப் பக்கவாத்தியம் இசைக்கின்றன தகவல்-ஒளிபரப்புச் சாதனங்கள். இதன்மூலம் இஸ்லாமியத் தீவிரவாதம் பேரபாயமாக உருப்பெருக்கப்படுகிறது. எனினும் இதன்பொருள் இஸ்லாமியத் தீவிரவாதம் இல்லவே இல்லை என்று மறுப்பதாகாது.

ஓர் எழுச்சியை எப்போதுமே பிற்போக்கு சக்திகளும் தக்க முறையில் பயன்படுத்திப் பெரும் சீரழிவுகளை நிகழ்த்துவதை நாம் இந்திய அரசியலை கருத்தூன்றி கவனிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். இத்தகைய மனவெழுச்சிபலம் வாய்ந்த பிற்போக்கு சக்திகளின் கைகளுக்குள் முழுவதும் வீழ்ந்து விட்டதா என்பதையே நாம் ஆராய வேண்டும். அவ்வாறாயின் இதன் தாக்கம் ஒட்டுமொத்த சமூகத்தையே பாதிக்கும். மாறாக, ஒரு தேர்ந்த இயக்கமாகவும் ஒரு சமூகத்தின் அவலங்களைக் களைந்தே ஆகவேண்டும் என்கிற லட்சிய தாகத்துடன் எழுவதாகவும் இருக்குமானால் அதன்வழியே இதர அமைப்புகளும் கைகோர்த்துச் செல்ல வழியுண்டாகும். உலக அளவிலேயே இதை வீரார்ந்த முறையில் செயல்படுத்த முடியும். இந்த நோக்கை இதுவரை முஸ்லிம் சமுதாயம் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.

இவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டால் முஸ்லிம் இளைஞனின் அமைதியின்மையைக் களைய முடியும். அமைதியின்மை களையப்பட்டால் படைப்பாற்றல் பெருகும். படைப்பாற்றல் சரியாக உருவாகுமாயின் இந்தச் சமூகமும் தலைநிமிரும். இதில் எவ்வித ஐயமும் வேண்டாம்.

**
நன்றி : களந்தை பீர் முஹம்மது & 'ஈமான்' அமைப்பு , துபாய்.

 

 

Search Net


Send your Comments  to abedheen@yahoo.com