சலாமலய்க்கும்...!
 

ஆபிதீன் பக்கங்கள்

Buy Abedeen's Book from 'Sneha Publishers'
நாகூர் புலவர்கள்

குலாம் காதர் நாவலர்

புலவர் ஆபிதீன்

சித்தி ஜூனைதா பேகம்

வஹ்ஹாப் சாஹிப்

ஜஸ்டிஸ் இஸ்மாயில்

கமலப் பித்தன்

ரவீந்தர்

நாகூர் சலீம்

ஜாஃபர் முஹ்யிதீன்

தூயவன்

இஜட். ஜஃபருல்லா

கதீப் சாஹிப்

சாரு நிவேதிதா

நாகூர் ரூமி

ஆபிதீன்

அப்துல் கையும்

இஸ்மாயில்

 

  பதிவுகள்

  கீற்று

  திண்ணை

  தமிழ்மணம்

  தமிழரங்கம்

  மதுரை மின்தொகுப்பு

  நூலகம்

Abedeen's Home

கேலியுடன் நையாண்டி
கிண்டல் செய்யும்
கிரித்துவத்தில் இவ்வூரில்
குறைச்சல் இல்லை

போலிகளும் இவ்வூரில்
பிழைப்பது உண்டு
பொட்டலத்து சர்க்கரையை
புனிதம் என்று

கையும் (அந்த நாள் ஞாபகம்)


நாகூர் தந்த நற்றமிழ் புலவர்கள்

Jafer Mohideen

சொல்லரசு , மு.ஜாபர் முஹ்யித்தீன்

இஸ்லாமியத் தமிழ்ச் சிற்றிலக்கிய முதல் மாநாடு (15-16 பிப்ரவரி 1992 புதுக்கோட்டை) சிறப்பு மலரிலிருந்து

தமிழகத்தின் 22ஆம் மாவட்டமாக மலர்ந்துள்ள நாகப்பட்டினம் காயிதே மில்லத் மாவட்டம் பண்டைய பெருமையையும் பல்வேறு சிறப்புகளையும் கொண்டது.

கி.பி மூன்றாம் நூற்றாண்டு துவங்கி இப்பகுதியில் கடல் வாணிகம் சிறந்திருந்ததையும் மக்கள் செழிப்புற வாழ்ந்திருந்ததையும் வரலாற்றுக் குறிப்புகளில் காண முடிகிறது.

துறைமுகப் பட்டினமாகிய நாகப்பட்டினத்தை அடுத்துள்ள நாகூரின் வரலாறு தனித்தது அல்ல. மாறாக வடநாகை என்றே பேசப்பட்டு வந்தது என்றாலும், தனித்த நாகூரின் வரலாறு சிறப்புக்குரியதாக தொடங்கியது பதினைந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் எனலாம். இஸ்லாமிய சமயப் பிரச்சாரம் செய்து இங்கு வந்து தங்கிய இறைநேசச் செல்வர், ஹஜ்ரத் செய்யிது அப்துல் காதிர் ஷாஹூல் ஹமீது மீரான் சாஹிபு ஆண்டகை அவர்களின் வருகையைத் தொடர்ந்து இவ்வூரின் வரலாறு வெளிச்சத்திற்கு வந்தது எனில் அது மிகையல்ல. நாகூர் நாயகம் அவர்களின் வருகைக்கு முன்பே இந்தப் பகுதியில் முஸ்லீம்கள் பரவலாக வாழ்ந்தார்கள் என்கிற உண்மை , எழுதப்பட்ட வரலாற்று நூல்கள் எதிலும் மறைக்கப்படவில்லை. அதே நேரத்தில் ஹஜ்ரத் ஆண்டகை அவர்களின் நாகூர் வருகைக்குப் பின்னர் அவர்கள் பல்கிப் பெருகினார்கள்; பெருவாழ்வு வாழ்ந்தார்கள் என்கிற உண்மையும் வரலாற்று வரிகளாக ஒளிர்கின்றன.

நாகூர் நாயகம் அவர்களின் வருகைக்கு முன்பு வாழ்ந்திருந்த முஸ்லிம்கள் கடல் வாணிகம் புரிபவர்களாக வாழ்ந்தார்கள் என்பதை உணர்த்தும் அழியாத சான்றுகளாக அன்றைய முஸ்லீம்கள் தங்களது பெயருக்குப் பின்னால், செய்யும் தொழிலைக் குறிக்கும் வகையில் மரைக்காயர் , மாலுமியார் , நகுதா , செறாங்கு என்றெல்லாம் இணைத்துக் கொண்டனர் என்பதைக் கொள்ளலாம். இன்றும் வாழையடி வாழையாக மரைக்காயர் , மாலுமியார் , நகுதா , செறாங்குகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். குஞ்சாலி மரைக்காயர் தெரு, மகதூசா மாலுமியார் தெரு , ஒலிசா செறாங்கு சந்து என்றெல்லாம் பெயர் விளங்கி சிறந்துள்ளார்கள்.

அன்றைய முஸ்லிம்களின் வணிகம் சிறந்திருந்தது, வாழ்வு செழித்திருந்தது என்பதை அறிந்திட முடிகிறது. அந்நாளில் புலமை மிக்க தமிழ் முஸ்லிம்கள் வாழ்ந்தார்களா , அவர்களின் படைப்பிலக்கியங்கள் உண்டா என்பன குறித்து நாம் எதுவும் சொல்ல முடியவில்லை; நமக்கு எதுவும் கிடைக்கவில்லை.

நாகூர் ஆண்டகை மீரான் சாஹிபு அவர்களின் வருகைக்குப் பின்னர் ஏறத்தாழ இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நாகூர்த் தமிழ் முஸ்லிம் புலவர்கள் பிறந்தார்கள், புலமையில் சிறந்தார்கள். தமிழ் இலக்கிய உலகிற்கு ஒரு பொற்காலம் அமைத்திட புதிய அத்தியாயம் துவங்கியது. பதினெட்டாம் நூற்றாண்டில் நாகூர் முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் எண்ணிக்கையில் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் ஒரே காலத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். இது இலக்கியவாதிகளுக்கு இனிக்கும் செய்தி. எழுதப்படும் வரலாற்று நூல்களில் இடம் பெற வேண்டிய குறிப்பு.

ஒரே காலத்தில் வாழ்ந்த புலவர் பெருமக்களில் சிலர் மொழிப் புலமையும் , சமய அறிவும் ஒரு சேர பெற்றிருந்தனர். வேறு சிலர் தமிழோடு பிறமொழி ஞானம் பெற்று பன்மொழிப் புலவர்களாக உலா வந்துள்ளனர். மற்றும் சிலர் மறைமொழியான அரபியில் ஆழ்ந்த அறிவும் ஆன்மீகத் துறையில் தேர்ந்த பக்குவமும் பெற்று திகழ்ந்திருக்கிறார்கள். இவர்களுள் வணிகம் புரிந்து பொருள் குவித்த வித்தகர்களும் உண்டு. மொத்தத்தில் நாகூர் தந்த நற்றமிழ் புலவர்களின் அறிவு , ஆற்றல் , படைப்புத் திறன் , கற்பனை வளம், மற்றவர்களை மிஞ்சக் கூடியதாகவும் விஞ்சக் கூடியதாகவும் இருந்த உண்மையை மெய்ப்பிக்க இன்றும் நம்மிடையே உள்ள இலக்கியச் செல்வங்கள் போதியனவாகும். அவர்களின் இலக்கியப் பணி ஒட்டு மொத்த தமிழ் சமுதாயம் எண்ணி மகிழத்தக்கவை. ஏற்றம் பெற்ற நிலையினை எடுத்துரைப்பவை.

நமக்கு இப்போது கிடைக்கப்பெற்றுள்ள ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு அன்றைய புலவர்களின் பெயர் பட்டியல் அமைகிறது. இதுவே அறுதியிட்ட முடிவு என்று சொல்ல முடியாது. நமது கவனத்திற்கு வராமல் சிலர் விடுபட்டிருக்கக் கூடும் என்றாலும் இப்போதைக்கு இதனை நிர்ணயிக்கப்பட்ட முடிவாகக் கொள்வது தவறல்ல. புலவர்களின் பிறப்பு , இறப்பு விவரம் தெரியாத நிலையில் அவர்களில் சிலர் இயற்றிய நூல்கள் கிடைக்காத நிலையில் , முழுமையான- நிறைவான - விரிவான விவரங்களைத் தர இயலாது. மேற்போக்கான ஆய்வில் பெறப்படும் செய்திகளைத் திரட்டித் தரும் முயற்சி இது. அதே நேரத்தில் எதிர்காலத்தில் எடுக்கப்படவிருக்கும் முனைப்பான முயற்சிக்குத் துணை புரியும், தூண்டுகோலாக அமையும் என்கிற நம்பிக்கையின் பிரதிபலிப்பு. அந்த வகையிலான விவரப் பட்டியல் இது. விமர்சனம் அல்ல; வரலாற்றுக் கட்டுரையும் அல்ல.

நாகூர் தமிழ் முஸ்லிம் புலவர்கள் பற்றி பேச முற்பட்டால் அல்லது எழுதிடத் தொடங்கினால் அறிஞர் வட்டத்தினரின் நினைவுக்கு வருபவர் , நெஞ்சில் நிழலாடுபவர் வா. குலாம் காதிறு நாவலரே ஆவார். அவரை முன்னிறுத்தியே பேசவும் எழுதவும் செய்கிறோம். அவர் பற்றி அறிந்து வைத்துள்ள அளவு அந்த காலத்திலேயே வாழ்ந்த மற்ற புலவர்களை அறிந்து வைக்கவில்லை. அவருடைய படைப்பு இலக்கியங்கள் கிடைக்கும் அளவில் மற்றவர்களின் படைப்பு இலக்கியங்கள் கிடைப்பதுவுமில்லை. இவை அன்றி வா.குலாம் காதிறு நாவலர் விட்டுச் சென்ற பல்வேறு வகைப் பட்ட இலக்கியங்களோடு அண்மைய கடந்த காலம் வரை நம்மிடையே வாழ்ந்த அவருடைய ஒரே மகன் வா. முஹம்மது ஆரிபு நாவலரின் பேரன் குலாம் ஹ¤சைன் நாவலர் ஆகியோர் வழி அவர் வாழ்வையும் பணியையும் அறிந்திடும் வாய்ப்பு கிடைத்தது. மற்ற புலவர்கள் சிலருடைய வழித்தோன்றல்கள் இன்றும் வாழ்கின்றார்கள் என்பது உண்மை. ஆனால் முன்னோர்கள் பற்றிய விவரம் தெரியாதவர்களாக , விரிவாக சொல்ல முடியாதவர்களாக இருக்கின்றார்கள். இது வியப்பிற்கும் வேதனைக்கும் உரியது. நாம் இலக்கியங்கள் வகையில் ஏழைகளாக இல்லை. ஆனால் ஏமாளிகளாக, இழப்பிற்குரியவர்களாக ஆகி விட்டோம். அதற்குரிய காரணம் நம்மவர்களின் இயலாமை அல்ல; மாறாக ஈடுபாடு இன்மையாகும்.

இன்றைக்கு காணப்படும் எழுச்சியும் விழிப்புணர்வும் பழைய இலக்கியங்களைப் புதிப்பிக்கும் வகையில் பதிப்பிக்கும் நன்முயற்சியில் முற்பட்டிருப்பதால் அது எதிர்கால இலக்கிய உலகில் ஒளிவீசும் என்கிற நம்பிக்கையை உண்டு பண்ணி விட்டிருக்கிறது. அதற்கு உதவிடும் வகையில் நாகூர் தந்த புலவர் பெருமக்கள் பற்றிய கூரிய பார்வையில் பட்டவை இங்கே.

நாகூர் தமிழ் முஸ்லிம் புலவர்கள் 17 ஆம் நூற்றாண்டில் பிறந்தார்கள் என்றாலும் 18ஆம் நூற்றாண்டில்தான் மொழிப்பற்றுடன் கூடிய அறிவாற்றல் வெளிப் பட்டது. தமிழில் பல்வேறு வகையிலான இலக்கியங்களையும் , தமிழுக்குப் புதிய வடிவங்களிலான இலக்கியங்களையும் வழங்கினார்கள். தமிழை வளர்த்தார்கள், தமிழால் வாழ்கின்றார்கள், இன்றும் கூட . பதினெட்டாம் , பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்து மறைந்தவர்கள் , அவர்கள் ஆற்றிய இலக்கியப்பணி பற்றிய விவரங்கள் நாம் அறிந்த அளவில் தரப்பட்டுள்ளது, அவ்வளவுதான் !

1. ஆயுர்வேத பண்டிதர் வாப்பு மகன் மகா வித்வான் வா.குலாம் காதிறு நாவலர் , 2. பிச்சை நயினார் மகன் பாவகை வல்ல கல்விக்களஞ்சியம் முகம்மதுப் புலவர் , 3. நெ.மதாறு சாகிபு நகுதா மகன் பெரும்புலவர் நெயினா மரைக்காயர், 4. கி.அப்துல் காதிர் சாகிபு மரைக்காயர் மகன் மதுரகவி வாருதி செவத்த மரைக்காயர் 5. இபுறாகிம் லெப்பை மரைக்காயர் மகன் இ.கிதுறு முகம்மது மரைக்காயர் 6. மீறா லெவ்வை மரைக்காயர் மகன் அல்லி மரைக்காயர் 7.முகம்மது உசேன் சாகிபு மரைக்காயர் மகன் மு.செவத்த மரைக்காயர் 8. முஆக்கின் சாகிபு நகுதா மகன் முகியுத்தீன் அப்துல் காதிறுப் புலவர் 9. செய்கு சுல்தான் சாகிபு மரைக்காயர் மகன் குலாம் முகம்மது சாகிபு மரைக்காயர் 10. அ.தம்பி சாகிபு மரைக்காயர் மகன் சீரியர் செவத்த மரைக்காயர் 11. பகீர் முகியித்தீன் மகன் வாஞ்சூர் பகீர் 12. யூ.சின்னத் தம்பி மரைக்காயர் மகன் யூ.சி.பக்கீர் மஸ்தான் 13. ப.கலீபா சாகிபு மகன் பகீர் முகியித்தீன் 14. முகம்மது நயினா ராவுத்தர் மகன் 'தரகு' நாகூர்க் கனி ராவுத்தர் 15. ஆதம் சாகிபு மகன் முகம்மது முகியுத்தீன் சாகிபு 16. தம்பி மாமா மரைக்காயர் மகன் முகம்மது அலி மரைக்காயர் 17. சி.யூசுபு மகன் வாஞ்சூர் பகீர் 18. ச.அப்துல் காதிர் நயினா மரைக்காயர் மகன் முகம்மது முஹிய்யித்தீன் மரைக்காயர் 19. மீ. செய்கு சுல்தான் சாகிபு மரைக்காயர் மகன் குலாம் முஹம்மது சாகிபு மரைக்காயர் 20. முகம்மது அலி மரைக்காயர் மகன் முகம்மது இமாம் கஸ்ஸாலி மரைக்காயர் 21.கோ.மு. முகம்மது நைனா மரைக்காயர் மகன் (காரைக்கால்) கோசா மரைக்காயர். 22. சு.பகீர் முகியித்தீன் 23. செ.கமீது மஸ்தான் 24. ம.முகம்மது மீறா சாகிப் புலவர். 25. தளவாய் ம. சின்னவாப்பு மரைக்காயர் 26. கா. பெரிய தம்பி நகுதா 27. க.காதிறு முகியித்தீன் சாகிபு 28.இ.செய்யது அகமது 29. மு.சுல்தான் மரைக்காயர் 30. வா.முகம்மது ஹூஸைன் சாஹிபு மகன் மு.ஜெய்னுல் ஆபிதீன் (புலவர் ஆபிதீன்) 31. பண்டிட் எம்.கே.எம் ஹூஸைன் 32. வா.கு. முஹம்மது ஆரிபு புலவர் 33. வா.கு.மு.குலாம் ஹ¤ஸைன் நாவலர்.

இவர்களுள் காலத்தால் முந்தியவர் முதன் முதலில் இலக்கியம் படைத்தவர் பிச்சை நயினார் மகன் முகம்மதுப் புலவர். ஆனால் அதிக எண்ணிக்கையிலான பல்வேறு வகைப்பட்ட இலக்கியங்கள் படைத்தளித்தவர் வா.குலாம் காதிறு நாவலர் ஆவார். அவருடைய ஆக்கங்களில் செய்யுள்களானவையும் உண்டு. உரை நடைகளிலானவையும் உண்டு. கூடவே மொழி பெயர்ப்பு நூல்களும் உண்டு. அந்த வகையில் நாகூர் முஸ்லீம் தமிழ்ப் புலவர்களில் அவரை தலைமைப் புலவராகக் கொள்வதும் கொண்டாடி மகிழ்வதும் மிகச் சரியான செயலாகும். 'தண்டமிழுக்குத் தாயா'கிய நான்காம் தமிழ்ச் சங்கத்தின் நக்கீரர் அல்லவா அவர்!

நாவலர் குலாம் காதிரின் படைப்புகள் பட்டியல் இப்படி விரிகிறது. 1. 'பிரபந்தத் திரட்டு' சச்சிதானந்தன் பதிகம், இரட்டை மணிமாலை, முனாஜாத்து, திருநாகை யமகபதிற்றந்தாதி, நாகைப் பதிகம், முனாஜாத்து ஆகியவை அடங்கிய அழகிய கவிதைகளின் கோவை ஹிஜ்ரி 1292ஆம் ஆண்டு காரைக்கால் முகம்மது ஸமதானி அச்சுக் கூடத்தில் அச்சிடப்பட்டது. 2. 'நாகூர்க்கலம்பகம்' நாகூர் ஆண்டகை ஹலரத் மீரான் சாஹிபு அவர்கள் சிறப்பு விவரிப்பது.கி.பி. 1878ல் வெளிவந்தது. 3.'முகாசபா மாலை' நாகூர் நாயகம் அவர்களின் கனவில் நிகழ்ந்த விண்ணேற்ற நிகழ்ச்சிகள் குறித்த குறுங்காவியம். 13 படலங்கள் 300 பாடல்கள் கொண்டது. முதற்பதிப்பு 1899ஆம் ஆண்டு காரைக்கால் முகம்மது ஸமதானி அச்சகத்தில் அச்சிடப்பட்டது. இரண்டாம் பதிப்பு 1883ஆம் ஆண்டு இலக்கியச் செல்வர் எம்.செய்யது முஹம்மது 'ஹஸன்' அவர்களால் சென்னை, மில்லத் பிரிண்டர்ஸ் மூலம் வெளியிடப்பட்டது. 4. 'குவாலியர்க் கலம்பகம்' ஹலரத் முகம்மது கௌது குவாலீரீ அவர்களிப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு 101 பாடல்கள் 1882ல் அச்சில் வந்தது. 5. 'திருமக்காத் திரிபந்தாதி' மக்க நகரின் சிறப்பு கூறும் 100 பாடல்கள் கொண்டது. 1895ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வச்சிரயந்திர சாலையில் அச்சிடப்பட்டது. 6. 'நாகூர்ப் புராணம்' ஹஜரத் சாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் அவர்களின் வாழ்வு சிறப்பு கூறுவது. மலடு தீர்த்த படலம், சித்திரக் கவித் திரட்டு உட்பட 30 படலங்கள் 1359 விருத்தங்கள். 1893ஆம் ஆண்டு ம.முகம்மது நயினா மரைக்காயர் பதிப்பு. 7. ஹலரத் செய்யிது அஹமது கபீர் ரிபாயி ஆண்டகை அவர்களின் வரலாறு. நூறுல் அஹ்மதிய்யா என்னும் அறபி நூலின் தழுவல். 2 காண்டங்கள் 43 படலங்கள் 2373 விருத்தங்கள். 1896ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது 'ஆரிபு நாயகம்'. 8. 'பகுதாதுக் கலம்பகம்' ஹலரத் கௌது நாயகம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் அடங்கியுள்ள பகுதாது நகர் சிறப்பு கூறும் 101 பாடல்கள் . 1894ஆம் ஆண்டு சென்னை ஆறுமுக விலாச அச்சுக் கூடத்தில் அச்சிடப்பட்டது. 9. 'பதாயிகுக் கலம்பகம்' ஹலரத் செய்யிது அஹ்மது கபீர் ரிபாயி ஆண்டகை அவர்கள் அடங்கியுள்ள பதாயிகு நகர் சிறப்பு உரைக்கும் 101 பாடல்கள் கொண்டது. 1900ல் அச்சில் வந்தது.

1901ஆம் ஆண்டு மதுரையில் நிறுவப்பட்ட நான்காம் தமிழ்ச்சங்கத்தின் பெருமைகள் உரைக்கும் நூல் (10) மதுரைத்தமிழ்ச் சங்கத்துப் புலவராற்றுப் படை. இதன் முதற்பதிப்பு 1903ஆம் ஆண்டு. மறுபதிப்பு 1968ல் வெளிவந்தது. பதிப்பித்தவர் இலக்கியச் செம்மல் டாக்டர்.ம.மு.உவைஸ்(இலங்கை). நாகூர் தறுகா ஷரீப் சிறப்புகளை 100 பாடல்களில் விவரிப்பது (11) 'தறுகா மாலை. நாவலர் குலாம் காதிறு மகன் வா.கு. முஹம்மது ஆரிபு நாவலர் 1928ஆம் ஆண்டில் மூன்றாம் பதிப்பை வெளியிட்டுள்ளார். முதல் மற்றும் இரண்டாம் பதிப்புகள் வெளிவந்த காலங்கள் குறிப்பிடப்படவில்லை.

12. 'மும்மணிக் கோவை'. 13. 'மக்காக் கோவை' 14. 'மதினாக் கலம்பகம்'. 15. பகுதாதுய மக அந்தாதி 16. 'சச்சிதானந்த மாலை' 17. 'சமுத்திர மாலை' 18. 'மதுரைக் கோவை' 19. 'குரு ஸ்தோத்திர மாலை' 20. 'பத்துஹூல் மிஸிர் பஹனஷாப் புராணம்'.

நாகூர் நாயகம் அவர்களின் அற்புத வரலாற்றை அழகிய தமிழ் உரை நடை நூலாகத் தந்தார். அந்நூல் (21) 'கன்ஜூல் கறாமத்து' எனும் பெயரில் அச்சில் வந்தது. காலம் 1902.

22. சீறாப்புராண வசனம் 23. திருவணி மாலை வசனம் 24. ஆரிபு நாயகம் வசனம் 25. சீறா நபியவதாரப் படல உரை 26. சீறாநபியவதாரப் படல உரை கடிலக நிராகரணம்.

27. நன்னூல் விளக்கம் 28. பொருத்த விளக்கம் 29. இசை நுணுக்க இன்பம் 30. அறபித்தமிழ் அகராதி 31. மதுரைத் தமிழ் சங்க மான்மியம்

அதிரை நவரத்தின கவி காதிறு முஹ்யித்தீன் அண்ணாவியரின் (32) 'பிக்ஹூ மாலை' உரை முதற் பதிப்பு 1890ம் ஆண்டில் வெளி வந்தது. அந்நூலின் இரண்டாம் பதிப்பை 1990 ஆம் ஆண்டு புலவர் அ.முஹம்மது பஷீர் வெளிக் கொணர்ந்தார். நாகூர் பெரியார் முஹ்யித்தீன் பக்கீர் சாஹிபு காமில் என்கிற செய்யது அப்துல் வஹ்ஹாப் ஆலிம் அவர்களின் (33) 'தறீக்குல் ஜன்னா (ஹி 1335). இலக்கணக் கோடாரி பேராசிரியர் திருச்சி கா பிச்சை இபுறாஹிம் புலவரின் (34) 'திருமதினத்தந்தாதி' உரை (1893).

இவை தவிர ரைனால்ட்ஸ் என்பார் ஆங்கிலத்தில் எழுதிய 'உமறு' என்னும் புதினத்தைத் தமிழாக்கி வெளியிட்டார். நான்கு பாகங்களிலான அந்நூலின் பெயர் (34) 'உமறு பாஷாவின் யுத்த சரித்திரம்'.

மலேயா (இன்றைய மலேசியா) திருனாட்டின் அழகு நகர் பினாங்கு. அங்கு நாவலர் குலாம் காதிறு இதழாசிரியராக புகழ் குவித்தார். 'வித்தியா விசாரிணி' என்னும் பெயரில் இதழ் நடத்திய காலம் 1888 ஆம் ஆண்டு. தொட்ட துறை அனைத்திலும் துலங்கிய திறன், ஆழ்ந்த புலமையின் வெளிப்பாடு மெச்சத்தக்க வகையில் இருந்தமையால் குலாம் காதிறு புகழ் முகட்டில் வாழ்ந்தார். 28.1.1908ல் அவர் மறுமைப்பேறு பெற்றார். தமிழ் கூறு நல்லுலகு ஈடு செய்ய முடியாத இழப்பு அது.

அடுத்த நிலையில் வைத்து எண்ணத்தக்க, ஏற்றமிகு புலவர் பிச்சை நயினார் மகன் பாவகை வல்ல கல்விக் களஞ்சியம் முகம்மதுப் புலவர். இவர் இலக்கிய உலகில் 'ஊஞ்சல் பாட்டு' புகழ் புலவராக பேசப்படுபவர். அவருடைய பிற ஆக்கங்களாகக் குறித்து வைத்துள்ள விவரப்படி (1) 'கேசாதி பாத மாலை' (2) 'முகியித்தீன் புராணம்' ஆகிய இரண்டு நூல்கள் மட்டும். ஆனால், முகம்மதுப் புலவரின் இலக்கியப் பணி அத்துடன் நின்றிடவில்லை. அவர் ஆற்றிய பணி விரிவானது.அழகும் ஆழமும் கொண்டது. அவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்க ஒன்று (3) புதூகுச்சாம்மென்னும் வசன காவியம். 1879ஆம் ஆண்டு காரை முஹம்மது மைதானி அச்சகத்தில் அச்சிடப்பட்டது. மற்றொன்று (4) நாகூர் கலறத் மீரான் சாகிபு ஆண்டவர்கள் பேரில் 'பிள்ளைத் தமிழ்' ஹிஜ்ரி 1291 அச்சில் வந்தது. நாகூர் நாயகம் அவர்கள் பேரில் வந்துள்ள பிள்ளைத்தமிழ் நூல்களின் எண்ணிக்கை இதனைச் சேர்த்து எட்டு. இனிக்கும் தமிழ் இலக்கியங்களில் இது ஒன்று.

நாகூர் புலவர்களுள் சிறப்புக்குரிய ஒருவர் கி. அவு.செவத்த மரைக்காயர். இவருடைய ஆக்கங்களில் (1) 'மும்மணிக் கோவை' (2) 'உயிர் வருக்கக் கோவை' ஆகிய நூல்கள் ஹிஜ்ரி ஆண்டு 1311ல் காரைக்கால் இந்தியக் காவலன் அச்சியந்திர சாலையில் அச்சிடப்பட்டவை. 'வருக்கக் கோவை' காரைக்காலில் அடங்கியுள்ள இறைநேசச் செல்வர், ஆரிபுல்லா காமில் ஒலியுல்லா, ஹலரத் மஸ்தான் சாஹிபு அவர்கள் பெயரால் அமைந்த பாடல்கள் நிரம்பியது.

மற்ற நூல்களில் பார்வையை கூர்மையாக்கும் வகையில் அமைந்த 'பயணக் கவிதை' நூல் அதுவும் கடல் கடந்த நாட்டில் அச்சிட்ட நூல் 'மலாக்காப் பிரதேசத்திரட்டு'. இன்றைய மலேஷியவின் பெருநகர்களில் ஒன்றான 'மலாக்கா'வை அடுத்துள்ள 'புலாவ் பெஸார்' தீவில் அடங்கியுள்ள இறைநேசச் செல்வர், ஹலரத் செய்குணா, செய்கு இஸ்மாயில் வலியுல்லா அவர்களின் 'ஜியாரத்' முடித்து வந்த பயணம் பற்றிய நூல். ஹலரத் செய்கு இஸ்மாயீல் வலியுல்லா அவர்களின் அருட்சிறப்பு விரவி உள்ளது. அத்துடன் புலவர் பாடிய 'இரத பந்தம்' 'அட்டநாக பந்தம்' 'இரட்டை நாக பந்தம்', 'கமல பந்தம்' ,'சித்திரக் கவி' ஆகியவை இடம் பெற்றுள்ளது. அடுத்து, மலேஷியத் திருநாட்டில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டின் போது வெளியிடப்படும் நூல்களில் கி.அவு. செவத்த மரைக்காயரின் 'மலாக்காப் பிரவேசத் திரட்டு', மற்றும் கோ.மு.கோசா மரைக்காயர் படைப்புகளில் ஒன்றான 'பினாங்கு உற்சவ திருவலங்காரச் சிந்து' ஆகிய நூல்கள் இடம் பெற வழிவகை காண வேண்டும். முனைப்பான முயற்சியில் ஈடுபட்டு, வரலாறு படைக்கவிருக்கும் மலேஷியாத் தமிழ் முஸ்லீம்கள் பயன் விளையும் பணிகளில் கவனம் செலுத்துவார்கள். இது நமது எதிர்பார்ப்பு.

நாகப்பட்டினம் கஞ்சஸவாய் பிரஸில் ஹிஜ்ரி 1321 ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட 'கந்தூரி திருவலங்காரச் சிந்து அலங்காரக் கும்மி' என்னும் நூலும் கி.அவு. செவத்த மரைக்காயர் ஆக்கமேயாகும். நாகப்பட்டினத்திற்கும், வேளாங்கண்ணிக்கும் இடையிலுள்ள பாப்பாவூரில் அடங்கியுள்ள இறைநேசச் செல்வர், ஹலரத் ஸையிதினா ஹாஜா செய்யிது அலாவுத்தீன் வலியுல்லா அவர்களின் பேரில் திருவிழா திருவலங்காரச் சிந்து, நாகப்பட்டினத்தில் அடங்கியுள்ள ஹலரத் ஸையிதினா சைய்யிது இபுனு மஸூத் வலியுல்லா அவர்களின் பேரில் இன்னிசை ஆகியவை உள்ளடங்கிய அழகிய படைப்பு. அவரது மற்றொரு நூல் சென்னை திருவல்லிக்கேணியில் அடங்கியுள்ள ஹலறத் செய்குனா செய்குல் மஷாயிகு செய்கு அப்துல் காதிறு சாகிபு ஆரிபு அவர்கள் பேரில் சரமாசிரிய விருத்தம். கலித்துறை இன்னிசை பதங்கள் கொண்ட நூல் 'பதங்கள்' என்னும் நூலுருவில் வெளிவந்தது. கரைக்கால் முகம்மது சமதானி அச்சகத்தில் 1896ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது.

ஒரே காலத்தில் மூன்று புலவர்கள் செவத்த மரைக்காயர் என்ற பெயருடன் வாழ்ந்திருக்கின்றார்கள். மூவரும் புலவை மிக்க மும்மணிகளாகத் திகழ்ந்திருக்கின்றார்கள். அவர்களுள் அ.தம்பி சாகிபு மரைக்காயர் மகன் த.செவத்த மரைக்காயர் சீரியர். இவர் நூலாசிரியர் இதழாசிரியர் ஆக இனிய இலக்கியப் பணி புரிந்தவர். அவர் வெளிக் கொணர்ந்த இதழ் 'சீரிய சூரியன்'. நாகூர் புலவர்களிடையே நிலவிய கருத்து வேறுபாடுகளை வெளி உலகுக்கு எடுத்துக் கூறும் வகையில் இதன் பணி தொடர்ந்தது. முன்னோடி இதழ்களில் இது ஒன்று.

த. செவத்த மரைக்காயர் சீரியரின் புலமைக்குச் சான்று கூறும் அவரது 'திருமக்காக் கோவை, மக்கா நகரின் சிறப்பு, மாநபி நாதர்(ஸல்) அவர்களின் மாண்பு விரித்துரைக்கும் அகப் பொருள் பாடல் 437 கொண்டது. அவருடைய தலையாய இலக்கியப் பணியாக இதனைக் குறிப்பிட வேண்டும். திருமக்காக் கோவையின் உள்பக்கத்தில் காணப்படும் குறிப்பை அவரது மற்ற நூல்கள் பற்றிய விவரமாக எடுத்துக் கொள்ளலாம். அவை (1) 'தர்காக் கோவை' (2)'ஜைலான் மும்மணிக் கோவை' (3)'பகுதாதுக் கலம்பகம்' (4)'ஆரிபு பிள்ளைத் தமிழ் (5) 'பார்ப்பாரூர் யமக நூற்றந்தாதி' (6) 'தந்தையந்தாதி' (7) 'மாணிக்கபூர் மாணிக்க மாலை' (8) 'கீர்த்தனாச் சாரம்' (9)'குருமணி மாலை' (10) 'திருப்பா' (11) பதஉரை , பொழிப்புரை விரிவுரையுடன் கூடிய 'குத்பு நாயகம்' (12) 'மெஞ்ஞானத் தீர்மானம்' ஆகிய பனிரெண்டு. இவற்றுள் 'பகுதாதுக் கலம்பகம்' அச்சிடப் பட்டுள்ளதாகத் தெரிகிறது. இப்பட்டியலில் குறிப்பிடாத ஒன்றான 'திருமணிமாலை வசனம் பார்க்க்க விசனம்' என்னும் சிறுநூலும் வெளிவந்துள்ளது. மற்றவை அனைத்தும் அச்சில் வந்தனவா என்பதுவும் அப்படி அச்சிடப்பட்டிருந்தால் எப்போது வந்தது என்பதும் தெரியவில்லை. அத்தனையும் அச்சில் வந்திருப்பின் நாகூர்ப் புலவர்களில் குலாம் காதிறு நாவலருக்கு அடுத்த நிலையில் வருபவர் த. செவத்த மரைக்காயர் ஆவார்.

முஸ்லீம் தமிழ்ப் புலவர்களில் முத்தமிழ் வித்தகர் நெ.மதாறு சாகிபு மகன் பெரும்புலவர் முகம்மது நயினா மரைக்காயர் எனலாம். அவர்க்குப் புகழ் சேர்த்த அவரது படைப்புகள் (1) 'தேவார மஞ்சரி' (2) 'புகழ்ப்பா மஞ்சரி' (3) 'கீர்த்தன மஞ்சரி' ஆகியவை. அவரது ஆழ்ந்த தமிழறிவுக்கும், புலமை செறிவுக்கும் இசைஞானத்திற்கும் பதச் சோறாக 'லால் கௌஹர்' நாடகத்தைக் கூறலாம். இவ்வட்டாரப் பேரூர்களில் மேடை நாடகமாக நடிக்கப்பட்டுச் சிறப்பு சேர்த்தது. நாடக நூலினை வா.குலாம் காதிறு நாவலர் பதிப்பித்தார். முதற்பதிப்பு காரைக்கால் முகம்மது சமதானி அச்சகத்திலும் இரண்டாம் பதிப்பு 1901ல் சென்னை இட்டா பார்த்தசாரதி அச்சுக் கூடத்திலும் அச்சிடப்பட்டது. கடந்த ஆண்டு (1990) டிசம்பர் திங்கள் கீழக்கரையில் சீரோடும் சிறப்போடும் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டை ஒட்டி 'லால் கௌஹர்' நாடகம் மூன்றாம் ப்திப்பு வெளியிடப்பட்டது. பதிப்பித்தவர் பேராசிரியர் டாக்டர் சே.மு.முஹம்மது அலீ. வெளியீடு சென்னை சுலைமான் ஆலிம் அறக் கட்டளை.

பெரும்புலவர் முகம்மது நயினா மரைக்காயர் வண்ணம் , இன்னிசை, சித்திரக் கவிகள் பாடியுள்ளார். அத்துடன் அன்றைய வணிகர்களுக்குப் பயன்தரக்கூடிய வாணிப குறியீட்டு நூலாக 'நெயினாஸ் கோட்' வழங்கி அன்றைய தேவையை நிறைவேற்றியுள்ளார். குலாம் காதிறு நாவலர் படைப்புகளில் ஒன்றான 'சமுத்திர மாலை' முகம்மது நெயினா மரைக்காயரை பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்டதாகும். சிலேடையிலான பாடல்கள் நிறைந்தது.

மூவர் வினா-விடை முறையில் பேசுவது போல் அமைந்த, இறை புகழ்ப்பாக்கள் நிறைந்த நூல் ஒன்று உண்டு. அதன் பெயர் 'மூவர் அம்மானை'. நூலாசிரியர் பெயர் மீறா லெப்பை மரைக்காயர் மகன் அல்லி மரைக்காயர். 'மூவர் அம்மானை' 1873ஆம் ஆண்டிலும் இரண்டாம் பதிப்பு 1876ஆம் ஆண்டிலும் முன்றாம் பதிப்பு 1878ஆம் ஆண்டிலும் வெளிவந்துள்ளது. அந்நாளில் மூன்று பதிப்புகள் வெளியிடப்பட்ட நூல் இது ஒன்றே. அதற்கு மக்களிடையே இருந்த வரவேற்பை உணர்த்துகிறது. மீ.அல்லி மரைக்காயர் இயற்றிய மற்ற நூல்கள் வருமாறு. (1) 'பிரபந்தக் கொத்து' (2) முகைதீன் அப்துல் காதிர் ஆண்டவர் பேரில் 'பதிற்றுப்பத்தாந்தாதி' (3) 'முனாஜாத்து' (4) 'நெஞ்சறிவுத்தல்' (5) 'அன்னம் விடு தூது' (6) வண்டு விடு தூது. பெரும்பாலும் நூல்கள் பதினொன்று பாடல்கள் கொண்டது. அனைத்தும் கட்டளைக் கலித்துறை பாடல்களாக அமைந்தவை. இவற்றை 1878ல் நாவலர் குலாம் காதிறு பதிப்பித்துள்ளார். நூல்கள் கலாரத்னாகர அச்சுக் கூடத்தில் அச்சிடப்பட்டவை. 'நெஞ்சறிவுத்தல்' மார்க்க அறிவுரை கூறும் ஐந்து பாடல்களைக் கொண்டது.

செய்கு சுல்தான் சாகிபு மரைக்காயர் மகன் குலாம் முகம்மது சாகிபு மரைக்காயர் (1) 'ஹக்குப் பேரிற் பதிகம்' (2) 'நபியுல்லா பேரிற்பதிகம்', 'இமாம் ஹூசைன், இமாம் ஹஸன், முஹ்யித்தீன் ஆண்டவர்கள் ஆகியோர் பேரிற் பதிகம்' பாடியுள்ளார். அவை (3) 'துதிப்பாத் திரட்டு' என்னும் பெயரில் நூலுறு பெற்று 1876ஆம் ஆண்டு வெளிவந்தது. க.பகீர் முகியித்தீன் நாகூர் ஆண்டகை அவர்களின் சிறப்பையும் தர்காஷரீபின் சீரையும் 44 பாடல்களின் வடித்துள்ளார். 1876ஆம் ஆண்டு பதிக்கப்பட்ட அந்நூலின் பெயர் 'நாண்மணி மாலை'. இபுறாஹிம் லெப்பை மரைக்காயர் மகன் இ.கிதுறு முகம்மது மரைக்காயர் 'குதுபு' சதகம் பாடியுள்ளார். இது 1893ல் அச்சிடப்பட்டது. ப. கலிபா சாகிபு மகன் ·பகீர் முகியித்தீனின் 'கீர்த்தனா மாலிகை' 1886ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

1895ஆம் ஆண்டு மலேஷியா 'பினாங்கு' நகர் கிம் சேய்க் ஹியான் அச்சியந்திர சாலையில் அச்சிடப்பட்ட நூல் 'பினாங்கு உற்சவ திருவலங்காரச்சிந்து'. நூலாசிரியர் நாகூர் கோ.முகம்மது நைனா மரைக்காயர் மகன் கோசா மரைக்காயர். இவர் இயற்றிய நூல்கள் எட்டு. இவற்றுள் நாடகங்கள் நான்கு. முறையே (1) சதானந்த மாலை (2) மனோரஞ்சித சஞ்சீவி என்னுமோர் அற்புத கிஸ்ஸா (3) திருக்காரைத் திருவிழாச் சிந்து (4) வைத்திய மகுடம் (5) சராரே இஷ்க் நாடகம் (6) ஷிரீன் பரஹாத் நாடகம் (7) ஜூஹூரா முஸ்திரி நாடகம் (8) லைலா மஜ்னூன் நாடகம். இவை அச்சில் வந்த காலம், பதிக்கப்பட்ட அச்சகம் பற்றிய விவரம் தெரியவில்லை.

முத்தமிழ் வித்தகர் நெயினா மரைக்காயரின் 'லால் கௌஹர்' நாடக நூலை அடுத்து வந்ததும், அடுத்த நிலையில் வைத்து எண்ணத் தக்கதுமான நூல் 'அப்பாசு நாடகம்' ஆகும். நாகூர், நாகப்பட்டினம், பினாங்கு, சிங்கப்பூர், சிங்கப்பூர் ஆகிய ஊர்களில் வழங்கிய வர்ண மெட்டுப் பாட்டுக்களின் இராகங்களில் அமைந்த நாடகத்தை இயற்றியவர் பகீர் முகியித்தீன் மகன் வாஞ்சூர் பகீர். அப்பாசு நாடகம் 1892ல் அச்சேறியது. ஆங்காங்கே நடிக்கப்பட்டு பரவலான புகழ் ஈட்டியது.

மு. ஆக்கீன் சாகிபு மரைக்காயர் மகன் மு.ஆ. முகையித்தீன் அப்துல் காதிறுப் புலவர் இயற்றிய 'நபியுல்லா பேரில் துவாதசக் கலித்துறை சந்தக் கும்மி' நாகை ஸ்காட்டிஸ் பிராஞ்சு அச்சுக் கூடத்தில் அச்சிடப்பட்டது. காலம் 1879ஆம் ஆண்டு. அவரது மற்றொரு நூல் 'சங்கீத கீர்த்தனா மாலிகை' சிங்கப்பூர் தீனோதய வேந்திர சாலையில் 1916ஆம் ஆண்டு அச்சேறியது.. பிறிதொரு நூல் 'நாகூர் யூசுபிய்யா மாலை 1918ஆம் ஆண்டு நாகை நீலலோசனி அச்சுக் கூடத்தில் அச்சிடப்பட்டுள்ளது.

யூ. சின்னத்தம்பி மரைக்காயரின் மகன் யூ.சி.பக்கீர் மஸ்தான் ஆக்கங்கள் மூன்று. அவை முறையே 'திருத் தோத்திர கீர்த்தனம்' 1`912ல் ரங்கூன்(பர்மா) ஸ்ரீ ராமர் அச்சுக் கூடத்தில் அச்சிடப்பட்டது. 'கீர்த்தனா மஞ்சரி' 1916ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. நாகை நீல லோசனி அச்சகத்தில் அச்சிடப்பட்டது. அதே ஆண்டில் வெளியிடப்பட்ட 'திருப்புகழ்' என்னும் தலைப்பிலான நூலில் இருப்பவை நாகூர் ஆண்டகை அவர்களின் பெயராலியற்றப்பட்ட நவீனாலங்கார ஜாவளிப்பதங்கள் சந்தக்கவிகள்.

ரிபாயீ தறீக்காவின் ஞான மேதைகளில் ஒருவராக விளங்கிய கு.அ.பு.ஹாஜா முஹியிதீன் ஆலிம் சாஹிபு சில நூல் எழுதியுள்ளார்.

1925ஆம் ஆண்டு அச்சில் வந்த திருவருள் கீர்த்தனம் - 'முனாஜாத்துல் முன்ஜியாத்துத் திருவருள் மெஞ்ஞான கீர்த்தனம்' நாகையில் அடங்கியுள்ள ஹலறத் செய்யிதுனா செய்யிது முபாரக் வலியுல்லா அவர்கள் பெரில் பாடப்பட்ட கீர்த்தனங்கள். காரைக்காலில் அடங்கியுள்ள மெய்யடியார் ஹலறாத் செய்யிதகுமது ஆலிம் சாஹிபு அவர்கள் பேரில் 'முனாஜாத்துப் பதிகம்' பாடியுள்ளார். 11 பாடல்களைக் கொண்ட இந்நூல் 1939ஆம் ஆண்டு காரைக்கால் ஹூசைனிய்யா பிரசில் அச்சிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து நபிகள் பெருமானார்(ஸல்) அவர்கள் திருப்பெயரால் இயற்றபெற்ற 'முனாஜாத்து' 11 ஆசிரிய விருத்தங்கள் உள்ளடங்கியது. 1941ஆம் ஆண்டு கூத்தாநல்லூர் கமாலிய்யா பிரஸில் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளது.

கு.அ.பு. ஹாஜா முஹியித்தீன் ஆலிம் சாஹிபின் இளவல் அ.பு.செய்கு சுல்தான் சாஹிபு மரைக்காயர் 'அருட்கவி'யாக அங்கீகரிக்கப்பட்டவர். அவர் இயற்றிய நூல்களில் குறிப்பிடத்தக்கவை 'முனாஜாத்து தோத்திரப்ப மஞ்சரி' 'மணியலங்கார கீர்த்தனை'. இவை முறையே 1938-1939 ஆண்டுகளில் பினாங்கு (மலேஷியா) போனிக்ஸ் அச்சியந்திர சாலையில் அச்சிடப்பட்டவை.

நாகூரில் வாழ்ந்த புலவர் பெருமக்களில் தமிழறிவில் தேர்ந்து திறன் படைத்தவர்களாக விளங்கிய அதேபோது அறபி மொழிப் புலமை பெற்றவர்களாகவும் மார்க்க நெறி முறைக்கேற்ப வாழ்வை அமைத்துக் கொண்டவர்களாகவும் எடுத்துரைக்கும் போதகர்களாகவும் இருந்திருக்கிறார்கள். இந்த உண்மை அவர்களில் சிலர் இயற்றிய நூல்கள் வழி தெரிய வருகிறது. இவ்வறிஞர்களின் எழுத்தோவியங்கள் அறபி மொழிப் பெயர் தாங்கி, தமிழ் நூல்களாக வெளிவந்துள்ளன. 'இஸ்லாம் எங்கள் வழி; இன்பத் தமிழ் எங்கள் மொழி' என்னும் வரிவடிவங்களுக்கு அடித்தளமிட்டவர்கள் அந்நாளைய முஸ்லீம்கள். நமது முன்னோர்கள் அழகு திருப்பணி ஆற்றிய ஆன்றோர்களை இப்படி வரிசைப்படுத்தலாம். (1) ஹாஜி சுல்தான் மகன் அஹ்மது இபுறாஹீம் மரைக்காயர் ஆலிம். இவர் இயற்றிய நூல் 'கஜானத்து இக்வாந்பீ-தலபிஸ ஆதத் திற் ரஹ்மான்'. இது நாகை கஞ்சஸவாய் அச்சியந்திர சாலையில் ஹிஜ்ரி 1325ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது. (2) வாசு. வாஞ்சூர் பக்கீர் சாயபு ஆக்கம் 'ஹாதா இஸ்திஹாருன் நாமா பீ றத்தி அக்வாலுல் வஹாபியா' என்னும் பெயரில் வெளிவந்தது. இதுவும் கஞ்சஸவாய் அச்சகத்திலேயே அச்சிடப்பட்டது. காலம் 1924 ஆம் ஆண்டு. (3) மௌலா சாஹிபு என்ற ஷாஹ் முஹம்மது கௌது சாஹிபு ஆரிபு 'இருபானுஸ்ஸபாவென்னும் மெஞ்ஞானத் தெளிவு' என்னும் நூலைப் படைத்தளித்துள்ளார். கலிவிருத்தம் 48, வெண்பா 12. கட்டளைக் கலித்துறை எழுசீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தம். 1926ஆம் ஆண்டு திருவாரூர், கருணாநிதி அச்சியந்திர சாலையில் அச்சிடப்பட்டது. நாகூர் நாயகம் அவர்களின் வழித்தோன்றல்களில் ஒருவரான (4) அஸ்ஸெய்யது ரஹ்மத்துல்லா ஆலிம் சாஹிபு சமுதாயத்தில் நிலவிய சில பல சமய நெறிக்குப் புறம்பான செயல்களைக் கண்டித்து தீர்ப்பு வழங்கியவர். அவரது நூல்களாக கீழ்க்கண்ட நூல்களைக் குறிப்பிடலாம். (அ) ஹிதாயத்த்துல் அனால் இலா இஜ்தினாபி தர்ஜூமதில் குத்பா பைனல் அவாம். 1928ஆம் ஆண்டு நாகை ஜனோபகார அச்சகத்தில் அச்சிடப்பட்டது. (ஆ) 'துஹ்பத்துல் முமிநீன்' இந்நூல் நாகை அகஸ்தியர் பிரஸில் 1929ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது. (இ) 'ஜிமாயத்து அஹ்லல் இஸ்லாம் மின் ஜில்லத்தில் அக்தாம்' என்னும் நூல் 1933ஆம் ஆண்டில் நாகை அகஸ்தியர் அச்சுக் கூடத்தில் அச்சிடப்பட்டுள்ளது.

அல்லாமா மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களின் 'மவாஹிபுல் மஜீத்பீ மனாகிபி ஷாஹூல் ஹமீத்' என்னும் நூலினை ''கஜானத்துல் கறாமத்' என்னும் பெயரில் தமிழுரு பெறச் செய்தவர் அறபி மொழி அறிஞரான நானா சாகிபு என்கிற அல்ஹாஜ் மு.குலாம் தஸ்தகீர் ஆலிம் ஸாகிப். 'கஜானத்துல் கறாமத்' 1939, 1946ஆம் ஆண்டுகளில் இரண்டு பதிப்புகள் வெளிவந்துள்ளது. இவர் முன்னூறுக்கும் மேற்பட்ட அறபி மொழியிலான புகழ்ப்பா, மற்றும் இரங்கற்பா இயற்றிய பெருமைக்குரியவர்.

1933ஆம் ஆண்டு சிங்கப்பூர் கலோனியல் பிரிண்டிங் பிரஸில் அச்சிடப்பட்ட 'முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் சர்வலோக சற்குருநாதர்' , 1934ஆம் ஆண்டு சிங்கப்பூர் செயிண்ட் மேரீஸ் பிரஸில் அச்சிடப்பட்ட 'முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் கடைந்தேற்றும் வள்ளல்' , 1935ஆம் ஆண்டு நாகூர் ஆண்டவர் பிரஸில் அச்சிடப்பட்ட 'முஹம்மத் நபி(ஸல்) (இன்ஸான் காமில்) நிறைந்த புருடர்' ஆகிய மூன்று நூல்களின் ஆசிரியர் சி. ஹாஜி சிக்கந்தர்.

சு. அஹமது இபுறாஹிம் மரைக்காயர் ஆலிம் மகன் S.A. எஹ்யா மரைக்காயர் இயற்றிய 'அரும் பொருட்பா வைங்கவி' 1940ல் வெளிவந்தது. நாகூர் ஆண்டவர் பிரஸில் அச்சிடப்பட்ட இந்நூலில் பாகிஸ்தானின் தந்தை முஹம்மது அலி ஜின்னாவைப் பற்றிய பாடல்கள் இடம் பெற்றுள்ளது. சி..சி. அப்துர்ரஜ்ஜாக்கு (காதிரி) இயற்றிய நூல் 'நூறுல் ஹகாயிகு என்னும் அந்தரங்கச் சோதி' மதுரை நூருல் ஹக் பிரஸில் 1956ஆம் ஆண்டு அச்சேறியது.

அண்மைய கடந்த காலத்தில் வாழ்ந்து மறைந்த தமிழ் முஸ்லீம் புலவர்களில் நாடறிந்த புலவர் வா.முஹம்மது ஹூசைன் சாஹிப் மகன் மு.ஜைனுல் ஆபிதீன். பின்னாளில் இவர் 'புலவர் ஆபிதீன்' என்றழைக்கப்பட்டு அறியப்பட்டவரானார். ஏறத்தாழ 4000க்கு மேற்பட்ட இசைப்பாடல்கள், மரபுக்கவிதைகள் 13 நூல்களாக வெளிவந்துள்ளன. அவற்றுள் நமது கவனத்திற்கு வந்தவை (1) 'நவநீத கீதம்' (1934) , (2) 'தேன்கூடு (1943-இலங்கை), (3) 'அழகின் முன் அறிவு' (1960-சென்னை). அதே ஆண்டில் வெளிவந்த இரு நூல்கள் (1) 'முஸ்லீம் லீக் பாடல்கள்' , (2) 'இஸ்லாமியப் பாடல்கள்'. அவர் இயற்றிய பல பாடல்கள் இன்றும் இசைத் தட்டுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

குலாம் காதிறு நாவலர் மகன் வா.கு.முஹம்மது ஆரிபு நாவலர் நம்மிடையே வாழ்ந்து மறைந்தவர். தந்தையின் பெயர் சொல்லித் தமிழுக்குப் புகழ் சேர்த்தவர். அவர் ஆற்றிய இலக்கியப் பணிகள் எண்ணி மகிழத் தக்கவை. அவரது தந்தை மகாவித்வான், வா. குலாம் காதிறு நாவலரின் இறப்பு, அதனால் ஏற்பட்டு விட்ட இழப்பு அவருக்கு இதயக் கசிவை ஏற்படுத்திவிட்டது. கண்ணீர் வரிகளை 'கையறு நிலை'யாக பாடினார். அதுவே அவரது முதல் நூல். அதனை அடுத்து 1946ல் 'நாகூர் பிள்ளைத் தமிழ்' அச்சிட்டு வழங்கினார். அது அவரது தலையாயப் பணி. தொடர்ந்து வந்த 'மீறான் சாஹிபு முனாஜாத்து ரத்தின மாலை' 1971 ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது. நாகூர் தர்கா வித்வானா சிறப்பிக்கப்பட்ட ஆரிபு நாவலரின் வாழ்வும் பணியும் தமிழாக இருந்தது. தமிழுக்காக இருந்தது. ஆராவாரம் இன்றி அடக்கமாக வாழ்ந்த அவர் ஆழமாக பணி புரிந்தவர், உண்மை.

மகாவித்வான் வா.குலாம் காதிறு முதல் நாகூர் தர்ஹா வித்வான் வா.கு.முகம்மது ஆரிபு நாவலர் வரை நாகூர் தந்த நற்றமிழ் புலவர்கள் தமிழுக்கு அணி செய்யும் வகையில் படைப்பிலங்கியங்களை வழங்கியவர்கள். தமிழ் செழுமையுற செஞ்சோற் கோப்பைத் தந்தவர்கள். வேறு வார்த்தைகளில் சொல்வதானால் நாகூருக்குப் 'புலவர் கோட்டை' என்னும் புதுப் பெயர் ஏற்பட வழி அமைத்தவர்கள். அந்தப் பெருமைக்கு உரியவர்களின் வழித்தோன்றல்கள் இன்றும் வாழ்கின்றார்கள். என்றும் வாழ்வார்கள். இன்பத் தமிழுக்கு இனிமை சேர்ப்பார்கள்.

நன்றி : சொல்லரசு , மு.ஜாபர் முஹ்யித்தீன்

மேலும்...

 

 

Search Net


Send your Comments  to abedheen@yahoo.com

 

மு.மு. இஸ்மாயில்

தினமணி - 'தலைசிறந்த 100 தமிழர்கள்' பகுதியில் வெளியிடப்பட்டது (Year 2000):

கம்ப ராமாயணம் என்றதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது நீதிபதி மு.மு. இஸ்மாயில் (78). அந்த அளவுக்குக் கம்ப ராமாயணத்துடன் தன்னை இணைத்துக் கொண்டவர். நாகை மாவட்டம் , நாகூரில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்து சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ. ஹானர்ஸ் படித்து பின் சென்னை சட்டக் கல்லூரியில் முதல் வகுப்பில் தேறினார்.

1946 முதல் 1951 வரை வழக்கறிஞர். அப்போது விவேகானந்தா கல்லூரியில் பகுதி நேரப் பேராசிரியராகவும் இருந்தார். 1951 முதல் 1959 வரை சென்னை சட்டக் கல்லூரியில் பகுதிநேர விரிவுரையாளர். அதன் பிறகு தமிழக அரசின் கூடுதல் வழக்கறிஞர். 1967-ல் புதிதாக ஏற்படுத்தப்பட்ட தில்லை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி. 1979-ல் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி.

தன்னைக் கலந்து ஆலோசிக்காமல் கேரள மாநிலத்துக்கு மாற்றியதை ஆட்சேபித்து 1981-ல் பதவியை ராஜினாமாச் செய்தார். பள்ளி மாணவராக இருந்தபோதே கதர் ஆடை அணிந்து காங்கிரசுக்காகப் பிரசாரம் செய்தார். சிறுவயதிலிருந்தே உணவில் சுத்த சைவம். மேற்படிப்புக்காகச் சென்னை வந்தபோது காங்கிரஸ் தலைவர்கள் ராஜாஜி, சத்தியமூர்த்தி ஆகியோருடன் நெருங்கிப் பழகினார்.

சென்னையில் கல்லூரியில் படித்தபோது தந்தை ஸ்தானத்தில் இருந்து இவரை ஆதரித்த பேராசிரியர் கே.சுவாமிநாதனை நன்றியுடன் நினைவு கூர்கிறார். தமிழில் ஆர்வம் அதிகமாக இருந்ததால் திரு.வி.க, கல்கி, உ.வே.சாமிநாதய்யர் ஆகியோர் மீது மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டது. காரைக்குடியில் நடக்கும் கம்பன் விழாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து கலந்து கொண்டார். 'கம்பன் கண்ட சமரசம்', 'கம்பன் கண்ட ராமன்', அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள்' உள்பட 20 நூல்களை எழுதியிருக்கிறார். தமிழகத்தின் பல பகுதிகளில் கம்பன் கழகங்களைத் தொடங்கியிருக்கிறார். தற்போது சட்டக் கமிஷனின் தலைவர். "கடவுள் நம்பிக்கையும் தன்னம்பிக்கையும் வெற்றிக்கு முக்கியக் காரணம். பேராசிரியர் கே.சுவாமிநாதன் போன்ற உத்தமர்கள் என்னை ஆதரித்ததும் ஒரு காரணம்" என்பவர்.

"எதிலும் நேர்மையையும் சத்தியத்தையும் பின்பற்றினால் கடவுள் அருள் தானாக வரும்" -

இளைய தலமுறைக்கு : விடாமுயற்சியுடனும் தன்னம்பிக்கையுடனும் செயல்பட்டால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்.

***

நீதிமன்றத்திற்கும், நீதித் துறைக்கும் பெருமை சேர்த்த நீதிபதிகளில் அவர் ஒருவர். ஒருமுறை மொரார்ஜி தேசாய், 'இஸ்மாயில் போன்ற நீதிபதிகள் இந்த நாட்டில்தான் உருவாக முடியும். அவரைப் போன்றவர்கள் தோன்றுகிற இந்த பூமிக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்பதில் என்ன சந்தேகம்?' என்று என்னிடம் கூறினார். செதல்வாட் என்ற பிரபல வக்கீல்,' எல்லா நீதிபதிகளும் இஸ்மாயில் அளவு சட்ட அறிவு படைத்தவர்களாக இருந்தால் வழக்குகளை நடத்துவது எளிதாகி விடும்' என்று கூறியிருக்கிறார்.

இது தவிர, தனது மத நம்பிக்கைக்கு எந்த சிறு பழுதும் இல்லாமல், கம்ப ராமாயணத்தை பெரும் இலக்கியமாக மதித்து, அதில் அவர் காட்டிய புலமை பிரமிக்கத்தக்கது.

- துக்ளக் 2.2.2005 இதழில் 'சோ' -
 

 


நாகூர் கந்தூரி


கைலிக் கடைகளின்

'கட்-அவுட்' திருவிழா..!

'காதல் தேசம்'

'காதல் கோட்டை'

புடவைகள் பெயர்கள்..!

பூரிப்பில் பெண்கள்...!

·பாரின் சாமான்கள்

மோகத்தில் ஆண்கள்..!

ஹோட்டல் எங்கும்

விடாது ஒலிக்கும்

சட்டுவ சங்கீதம்

முட்டை புறாட்டா

மணம் -

மூக்கின் நுனியில்..!

கடலில் ஓடும்

கப்பல்கள்

தெருவில் ஓடும்

ஊர்வல விந்தை..!

வெடிகள் போட்டு

கொடிகள் ஏறும்

விமரிசையாக..!

நாகூர் கந்தூரி -

இங்கு

இரவிலும் சூரியன்..!

மொழிகளை எல்லாம்

இரண்டறக் கலந்து

செவிட்டில் அறையும்

கேஸட் அலறல்கள்...!

'மேட்-இன்'

செவ்வாய்க்கிரகம்

என்றும்

முத்திரை குத்தும்

வித்தைக்கரர்கள்..!

தர்ஹா உள்ளே

காணிக்கை எல்லாம்

உண்டியல் போட

கட்டளைக் குரல்கள்..!

பாதைகள் மறித்து

பாத்திஹா கடைகள்

தாயத்து டிசைன்கள்

விற்பனை அங்கு-

மொத்தமாகவும்

சில்லறையாகவும்..!

பால்டின் தகரத்தில்

சிற்ப வேலைகள்..!

அதை

வெள்ளியாய் மாற்றும்

ரசவாதக் கலைகள்..!

கஜல்கள் கவாலிகள்

நாட்டியத்தோடு

களி நடம் புரியும்

இளைஞர் கூட்டம்..!

கமிஷன் போக

மிச்சப் பணத்தில்

கரும் புகையோடு

வாண வேடிக்கை

கோலாகலங்கள்..!

பீர்சாபு எறியும்

எழுமிச்சைப் பழங்களில்

பிள்ளைவரத்தை

தேடும் பெண்கள்..!

சந்தனக் கூட்டில்

பூக்களை வீசிப்

பரவசப்படும்

பக்த கோடிகள்..!

'ஐயா..தருமம்..!'

என்ற

அபஸவரத்தோடு

ஊரே நிறைந்த

பிச்சைக்காரர்கள்..

அவர்களுக்கு

சுகத்தைக் கொடுக்கும்

சோத்துச் சீட்டுக்கள்..!

இன்னும்

தொண்டற் படைகள்

உண்டியலோடு..!

இகபர உலகில்

நண்மைகள் வேண்டி

இரண்டே ரூபாயில்

ஆண்டவர் தரிசனம்..!

இந்த ஆராவரங்களின் மத்தியில் கூட -

அந்த -

மகானை -

நினைத்தும் - துதித்தும்

சில

மனித மனங்கள்...

-இஜட். ஜபருல்லாஹ்
 

எங்கள் ஊர்..!

'வலியுல்லாஹ் உங்களுக்கு

வாரிக் கொடுப்பார்கள்'

என ஆசி வழங்கிவிட்டு

வந்தவர்களிடம்

தர்மம் பெறுவது

எங்கள் ஊரில்தான்!

இஜட். ஜஃபருல்லா